ஐந்திலக்கண நூல்கள்!!

ஐந்திலக்கண நூல்கள்


தொல்காப்பியம்
தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூறுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம்.


எழுத்தும் சொல்லும்

தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல்லுமே சிறப்பாகக் கருதத் தக்கன என எண்ணினர். இந்நிலையில் எழுத்தும் சொல்லும் பற்றி மட்டும் இலக்கணங்கள் தோன்றின. கி.பி. 12-ம் நூற்றாண்டளவில் எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நேமிநாதம் தோன்றியது. நன்னூல் கி.பி. 13-ம் நூற்றாண்டில் எழுந்தது. இந்நன்னூல் ஐந்திலக்கணமும் உணர்த்துவது எனக் கொண்டாலும், எழுத்தும் சொல்லுமே நிலைத்தன.

எழுத்தும் சொல்லும் இலக்கணமேயாயினும் சொல்லிலக்கணமே இலக்கணம் எனக் கருதினர். வடமொழி வாணர்கள் சொல்லிலக்கணத்தையே வியாகரணம் எனக் கொண்டனர். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் சொல்லக்கணத்தையே பெரிதும் ஆராய்ந்தன. கி.பி. 17-ம் நூற்றாண்டில் எழுந்த பிரயோக விவேகமும், இலக்கணக் கொத்தும் சொல்லிலக்கணம் பற்றியே விரிவாக விளக்கின.

எழுத்தும் சொல்லும் உணர்த்தும் நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நேமிநாதம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன.

அகப்பொருள் இலக்கணம்

பொருளதிகாரம் கிடைக்காததால் எழுந்த இலக்கண நூலே இறையனார் களவியல் என அந்நூல் உரை கூறுகின்றது. இறையனார் களவியல் தோன்றிய காலத்தில் எழுத்தும் சொல்லும், யாப்பும் கிடைத்தன. பொருள் கிடைக்கவில்லை; ஆதலால் இறையனார் களவியல் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது என அறிகிறோம். இக்காலத்தில் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்கு வகையாக ஆராயப்பட்டது என்று தோன்றுகிறது. மேலும் பொருள் என்பது அகப்பொருளே என்பதும் நாம் அறியவேண்டும். பொருளதிகாரம் வல்லாரைக் காணோம் என்று வருந்தியவர்கள் இறையனார் களவியல் கண்டனம் என அகப்பொருள் இலக்கணத்தையே பொருளாகக் கருதினர். இறையனார் களவியல் தோன்றிய காலமுதலே அகப்பொருள் தனியாக வளரத் தொடங்கியது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் நம்பியகப் பொருள் தோன்றியது. இந்நூலுக்கு முற்பட்டது எனக் கருதப்படும் திருக்கோவையாரில் அகப்பொருள் துறைகள் அமைந்த சூத்திரங்களும், துறைகளை விளக்கும் கொளுக்களும் காணப்படுகின்றன. இவை, யாரால் இயற்றப்பட்டன என்று புலனாகவில்லை. பின்வந்த பழனிக்கோவையிலும் இவ்வமைப்பு காணப்படுகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மாறனகப்பொருள் தோன்றியது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற இலக்கண விளக்கம், தொல்காப்பியத்தினையும் நம்பியகப் பொருளையும் பின்பற்றி அகப்பொருள் இலக்கணம் வகுக்கின்றது. முத்துவீரியம், தொன்னூல் விளக்கம் என்பனவும் அகப்பொருள் இலக்கணத்தினைக் கூறின. இறையனார் களவியலை ஒட்டிக் களவியற்காரிகை என்னும் நூலும் இயற்றப் பெற்றது. பரிமேலழகர் முதலியோருக்கு முற்பட்ட இந்நூல், அகப்பொருள் இலக்கணம் உணர்த்துகின்றது.

தொல்காப்பியர், அகப்பொருள் இலக்கணத்தினை வகுக்கும்போது, ஒவ்வொரு பாடலும் ஒன்றற்கொன்று தொடர்பின்றித் தனித்தனி நாடக பாத்திரங்களின் கூற்றாக அமைந்த நிலைக்கே இலக்கணம் கூறுகின்றார். இதனால் தொல்காப்பியத்தில் கூற்று உண்டேயன்றித் துறையில்லை என அறியலாம். பின் வந்தோர் நாடக பாத்திரம் பேசுதல்போல அமைந்த நிலையினின்றும் வேறுபட்டுத், துறைகளாகப் பகுத்து, ஒரு தொடர்கதை போல இலக்கணம் கண்டார்கள். இதனால் பல கோவை இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்தன.

அகப்பொருள் இலக்கணம் கூறும் நூல்கள்: தொல்காப்பியம், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், வீரசோழியம், நம்பியகப்பொருள், களவியற்காரிகை, மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன. இவையன்றித் திருக்கோவையார், பழனிக்கோவை ஆகிய நூல்களில் உள்ள நூற்பாக்களும் அகப்பொருள் இலக்கணம் கூறுகின்றன.

புறப்பொருள் இலக்கணம்

தொல்காப்பியம் புறத்திணையியல், புறப்பொருள் இலக்கணம் பற்றிப் பேசுகின்றது. இதன்பின் பன்னிருபடலம் எழுந்தது. பன்னிரு படலத்தின் வழிநூலாகப் புறப்பொருள் வெண்பாமாலை கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் பின் தனியாகப் புறப்பொருள் நூல்கள் தோன்றவில்லை. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பன ஓரளவு புறப்பொருளைப் பற்றிய இலக்கணம் கூறுகின்றன. வீரசோழிய உரைகாரர் மேற்கோளாகக் காட்டும் புறப்பொருள் பற்றிய நூற்பாக்கள் தனி நூலைச் சார்ந்தனவா? அவர் பாடியனவா? என்பது தெரியவில்லை.

புறப்பொருள் இலக்கணத்தைப் பொறுத்தமட்டில் புறப்பொருள் வெண்பாமாலையே சிறப்புற்று விளங்குகின்றது. வேறு புறப்பொருள் இலக்கண நூல்கள் தோன்றாமைக்கு உரிய காரணம் விளங்கவில்லை. ஒரு வேளை, காதல் பாடல்களும் - ஆன்மீக இலக்கியங்களும் போதும் என நினைத்தார்களோ, என்னவோ? அறியோம். புறப்பொருள் இலக்கியங்களும் மிகுதியாகத் தோன்றவில்லை என்பதனை இங்கு நாம் சிந்தித்தல் வேண்டும். பொதுவாக மனிதனை விலங்காகவும் மனித இதயத்தைக் கல்லாகவும் ஆக்கக்கூடிய போர் முறைகளில் கவிஞர்களுடைய உள்ளம் யாப்பிலக்கணம்

தொல்காப்பியம் செய்யுளியல் மிக விரிவுடையது. இவர் காலத்திலேயே பலர் யாப்புப் பற்றித் தனியாக ஆராய்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் பல இடங்களில் `யாப்பறி புலவர்' எனச் சுட்டுதல் இதற்குச் சான்றாகும். தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணவர் எனக் கூறும் காக்கைப்பாடினியார் யாப்பிலக்கணம் செய்ததாக அறிகிறோம். காக்கைப்பாடினியார் என்னும் பெயருடையார் இருவர், சிறுகாக்கைப்பாடினியம், பொருங்காக்கைப்பாடினியம் என்னும் இரண்டு நூல்கள் இயற்றினர். இவர்கள் பல்லவர் காலத்தினர் என்பர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கலமும். யாப்பருங்கலக் காரிகையும் தோன்றின. இந்நூலுரைகளால் பல யாப்பிலக்கண நூல்களை அறிகிறோம். அவற்றை நூலின் இறுதியில் உள்ள பட்டியலில் காண்க.

பாவிற்கு இலக்கணம் கூறுதற்குப் பதிலாக அப்பாவின் வகைகளுக்கு எடுத்துக் காட்டும் விளக்கமும் அளிக்கச் சில நூல்கள் தோன்றின. மாறன் பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, பல்சந்தப் பரிமளம், திருவலங்கற்றிரட்டு என்பன இத்தகைய நூல்கள். விருத்தப்பாவியல் என்ற நூல், சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. இது, வசனத்தில், விருத்தத்தை வடமொழி மரபு பற்றி ஆராயத் தொடங்கியது. வண்ணங்களின் இலக்கணம் கூறும் நூலினைத் தண்டபாணி சுவாமிகள் `வண்ணத்தியல்பு' என்னும் பெயருடன் செய்தார். இந்நூல் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

செய்யுள் இலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், யாப்பருங்கலம், காரிகை, வீரசோழியம், பாப்பாவினம், சிதம்பரச் செய்யுட்கோவை, சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், திருவலங்கற்றிரட்டு, பல்சந்தப் பரிமளம், விருத்தப்பாவியல், வண்ணத்தியல்பு முதலியன.


அணியிலக்கணம்

தொல்காப்பியர் உவம இயலில் உவமைக்கே முதலிடம் கொடுத்தார். இவ்வுவமையின் வேறுபாடுகளே ஏனைய அணிகள் என்பது அவர் கருத்து. பிற்காலத்தில் அணியிலக்கண ஆராய்ச்சி விரிந்தது. வடமொழியின் பயனால், இவ்வாராய்ச்சி பரந்துபட்டது. வடமொழிக்காவ்யாதர்சத்தை அடியொற்றித் தமிழில் தண்டியாசிரியர் அணிநூல் செய்தார். அவருக்கு முன் அணியியல் என்னும் பெயரால் நூல் ஒன்றும் இருந்தது. வீரசோழிய ஆசிரியர் 35 அணிகள் பற்றி விளக்குகின்றார். தண்டியலங்காரமும் 35 அணிகள் பற்றிக் கூறுகின்றது. ஆனால் வீரசோழியமும் தண்டியலங்காரமும் கூறும் அணிகளில், சில வேறுபாடுகள் உள்ளன. இலக்கண விளக்க நூலாசிரியர், தண்டியாசிரியரைப் பின்பற்றி 35 அணிகளே கொண்டார். மாறனலங்காரம் 64 அணிகளைப் பற்றிக் கூறுகின்றது. வடமொழிச் சந்திராலோகத்தையும் அதன் உரையான குவலயானந்தத்தையும் கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழில் மொழி பெயர்த்தனர். இவை 100 அணிகள் பற்றிப் பேசுகின்றன. முத்துவீரியம் 58 அணிகள் பற்றிக் கூறுகின்றது.

அணியிலக்கணம் கூறும் நூல்கள்:- தொல்காப்பியம், வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சந்திராலோகம், குவலயானந்தம் என்பன.


பாட்டியல்

யாப்பிலக்கணத்துள் பாட்டியல் அடங்கும். இப்பாட்டியல் ஆராய்ச்சியினை யாப்பின் ஒழிபியல் என்று கூடக் கூறலாம். இவ்வாராய்ச்சியினை இரண்டு கூறாகப் பகுத்து விளக்கம் கண்டனர். முதற்பகுதியில் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரிய பத்துப் பொருத்தங்கள் ஆராயப்பெறும். இப்பொருத்தங்கள் சோதிட நூலார் கூறும் மணப் பொருத்தங்கள்போல, இலக்கண நூலார் கூறும் இலக்கியப் பொருத்தங்களாகும். அவை: மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம் என்னும் பொருத்தங்கள். இவற்றோடு நாழிகைப் பொருத்தம், பெயர்ப்பொருத்தம், புட்பொருத்தம் என்பனவற்றையும் சிலர் சேர்த்துக் கூறுவர். இப்பொருத்தங்கள் பாட்டுக்கும் பாடப்படுவோனுக்கும் உரியது என்பதனை,

`விரித்த பாமகட்கும் வேட்கும் இறைக்கும்
பொருத்தம் ஈ.ரைந்து போற்றல் வேண்டும்'

என்பதனால் உணரலாம். இப்பொருத்தங்கள் ஒன்றப் பாடினால் பாடப்பெறுவோர் நன்மையடைவர். இன்றேல் அவர்கள் செல்வம் இழப்பர்; நோய் அடைவர்; சுற்றத் தொடர்பு நீங்குவர்; இறப்பும் எய்துவர். அவர்களுக்குச் சந்ததி ஏற்படாது. கடவுளைப் பாடும் போதும் பொருத்தங்கள் இல்லாமல் பாடினால், பாடுவோர் துன்பம் அடைவர் எனப் பாட்டியல் நூல்கள் பகர்கின்றன.


பொருத்தங்களின் வீழ்ச்சி

பத்துப் பொருத்தங்களுள் மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம் என்னும் இரண்டும் சொல் நோக்கியன. கணப்பொருத்தம் சீர்நோக்கியது; ஏனைய பொருத்தங்கள் எழுத்து நோக்கியன. இப்பொருத்தங்களைப் பற்றித் தொல்காப்பியர் ஏதும் கூறவில்லை. வெண்பாப் பாட்டியல் தோன்றிய கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குச் சற்று முன்பே இம்முறை ஏற்படத் தொடங்கியிருத்தல் வேண்டும். யாப்பருங்கல விருத்தியில், ஆனந்தக் குற்றம் என்பது அறுவகைப்படும் என விளக்கப்பட்டுள்ளது. இதனால் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே இவ்வாராய்ச்சி தோன்றிவிட்டது என்னலாம். இக்கொள்கை வடநூல் மரபினைத் தழுவி எழுந்தது என்பர். இக்கொள்கையினைப் பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் ஏற்கவில்லை. அவர்களுக்கு இக்கொள்கை உடன்பாடும் அன்று. நச்சினார்க்கினியர், பத்துப்பாட்டுரையில், `நூற்குற்றம் கூறுகின்ற பத்து வகைக் குற்றத்தே, தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் என்னும் குற்றத்தைப் பின்னுள்ளோர், ஆனந்தக் குற்றம் என்பதோர் குற்றம் என்ற நூல் செய்ததன்றி, அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இக்குற்றம் கூறாமையில், சான்றோர் செய்யுட்கு இக்குற்றம் உண்டாயினும் கொள்ளார் என மறுக்க' என்பர். பேராசிரியர், இம்மரபினைப் பிற்காலத்துத் தோன்றிய வழக்கு எனச்சொல்லி பாட்டியல் மரபு என்னும் நூலினை எடுத்துக்காட்டி, இந்நூல் நின்று பயனின்மை என்னும் குற்றத்திற்கு, மேற்கோளாக அமைவது என்பர். இவற்றால் பொருத்தம், குற்றம் முதலிய வேண்டாத அமைப்புக்களை அக்காலத்திலேயே அறிஞர்கள் எதிர்த்தனர் என்பது போதரும். இக்காலத்தில் இம்மரபு முற்றிலும் அழிந்து விட்டது என்று கூடக் கூறலாம்.

சிவா, மலேசியா

Popular posts from this blog

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு

மூவிடப்பெயர்