ஐந்திலக்கண நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சாமிநாதம் என்பன ஐந்திலக்கண நூல்களாகும். இவற்றுள் தொல்காப்பியத்தை ஐந்திலக்கணம் எனக் கூறுதல் மரபன்று. ஆயினும் ஐந்திலக்கணமும் இதன்கண் உண்டு. வீரசோழியம் பொருளை இரண்டு கூறாகக் கொண்டு இலக்கணமும் புறப்பொருள் இலக்கணமும் உணர்த்துகின்றது. இலக்கண விளக்கம் அகப்பொருள், புறப்பொருள், பாட்டியல் இவற்றின் இலக்கணமும் கூ றுகின்றது. தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் என்பன பாட்டியல் இலக்கணமும் கூறுகின்றன. சாமிநாதம் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூல் முழுதும் வெளிவரவில்லை. தமிழ் நெறி விளக்கம் என்னும் நூலும் ஐந்திலக்கண நூல் என்பர். இந்நூலில் அகப்பொருள் பகுதியே கிடைத்துள்ளது. பிற பகுதிகள் கிடைக்கவில்லை. நன்னூலும் ஐந்திலக்கண நூல் என்று கூறுவர். தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் என்னும் நூலும் ஐந்திலக்கணம் உணர்த்துவது என்பர். இனி ஒவ்வோர் இலக்கணப் பிரிவு பற்றியும் காண்போம். எழுத்தும் சொல்லும் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் ஆய்ந்தார்; பொருளும் ஆய்ந்தார். ஆனால் பின் வந்தோர் எழுத்தும் சொல...